போடிமெட்டு மலைச்சாலையில் சரிந்து கிடக்கும் ராட்சதப் பாறைகளை அகற்றுவதில் சிக்கல்: காய்கறி, மருந்து கொண்டு செல்ல முடியாமல் 3 நாட்களாக பரிதவிப்பு

போடி: தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டம், போடியிலிருந்து 26 கிமீ தூரம் கொண்ட இந்த மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக, கடந்த 9ம் தேதி இரவு, நான்காவது மற்றும் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே பிஸ்கட் பாறை மற்றும் ஆகாச பாறை அருகில், நீண்ட அளவில் மலைகளில் பிடிமானம் விட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. பல ஆயிரம் டன் கணக்கில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் சரிந்து விழுந்தது.

பெரிய அளவிலான பாறைகள் என்பதால், விழுந்த அதிர்வில் சாலையில் பிளவு ஏற்பட்டு பெயர்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்தில், குறிப்பிட்ட சில பாறைகளை மட்டும் அகற்றியுள்ளனர். முழு பாறையையும் ஜேசிபி இயந்திரத்தால் இழுக்கும்போது, மேலே உள்ள பாறைகளும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், சரிந்து நிற்கும் பாறையை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் ெதாடர்ந்து இப்பகுதியை பார்வையிட, மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம், கேரளா இரு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டியிருந்தாலும், கொரோனா தடுப்பு மருந்துகள், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு வாகனங்கள் மூலம் இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கின்றன. பாறை சரிவு காரணமாக, அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் வாகனங்கள் இந்தச் சாலையை கடக்க முடியாத நிலையில், கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிடக்கிறது. இதற்கிடையே, மதுரையிலிருந்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, மேற்கொண்டு சேதம் ஏற்படாத வகையில் பாறையை அகற்றிட, ஆலோசனை வழங்கிய பிறகே, பணிகள் துவங்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாரியின் ஆய்வுக்கு பின்னரே வெடி வைத்து அகற்றும் பணிகள் துவங்கும் எனவும் தெரிய வருகிறது. எனவே போடிமெட்டு மலைச்சாலையில் முந்தல் அடிவாரத்தில் எவ்வித வாகனங்களும் அனுப்பப்படாமல், சோதனைச்சாவடி பூட்டப்பட்டுள்ளது அதேபோல், கேரளாவில் இருந்து போடிமெட்டு வழியாக வரும் வாகனங்கள் அங்கு அனுமதிக்கப்படாமல் அங்குள்ள சோதனைச் சாவடியும் பூட்டப்பட்டுள்ளது.

Related Stories: