×

கொரோனா தினசரி இறப்பில் புதிய உச்சம் ஒரே நாளில் 4,205 பேர் பலி: 24 மணி நேரத்தில் பாதிப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த வாரம் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியும், தினசரி பலி 4 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்த நிலையில், கடந்த இரு நாட்களாக சற்று குறையத் தொடங்கியது.இந்நிலையில், நேற்று  இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,205 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு 4,205 பேர் பலியானது மீண்டும் பீதியை அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 197 ஆக உள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 3.29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மொத்த பாதிப்பு 2 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 4 ஆயிரத்து 99 ஆக உள்ளது. இதற்கிடையே, 2வது அலை சற்று தணிந்தாலும் ஜூலை இறுதிக்கு முன்பாக குறைய வாயப்பில்லை என வைரஸ் நிபுணர்கள் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

* உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தொற்று
கொரோனா இரண்டாவது அலையானது உச்ச நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மாதம் 40க்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியர்கள், ஏழு நீதிபதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

* இந்திய வகைன்னு சொல்லக் கூடாது
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் உலகில் 44 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த இந்த கொரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதை இந்திய வகை கொரோனா வைரஸ் என பெயரிட்டு குறிப்பிடுகின்றனர். ஆனால் பி.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இந்த வைரஸ் இந்திய வைரசாகும் என உலக சுகாதார நிறுவனம் எங்கும் கூறவில்லை எனவும் கூறி உள்ளது.

Tags : The new peak in corona daily deaths kills 4,205 people in a single day: an increase in vulnerability in 24 hours
× RELATED டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான...