சென்னை மாநகர தெற்கு மண்டல இணை கமிஷனர் லட்சுமி விருப்ப ஓய்வு: தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார்

சென்னை: சென்னை மாநகரக் காவல் துறையில் தெற்கு மண்டல இணை கமிஷனராக பணியாற்றிவரும் லட்சுமி விருப்ப ஓய்வு கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இணை கமிஷனர் லட்சுமி. தமிழக அரசின் குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் கூடுதல் எஸ்பி,  எஸ்பியாக பல மாவட்டங்களில் பணியாற்றி வந்தவர். சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து துணை கமிஷனராகவும் பணியாற்றினார். டிஐஜி-யாக பதவி உயர்வு பெற்றார். தற்போது மாநகர காவல் துறையில் தெற்கு மண்டல  சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் காவல் துறை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனவே, எனது விருப்ப ஓய்வை ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம்  அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.. ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி 2033ம் ஆண்டு தான் ஓய்வு  பெறுகிறார். 12 ஆண்டுகள் பணி இருக்கும் நிலையில் திடீரென ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி விருப்ப ஓய்வு  கேட்டு,  தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனது விருப்பத்தின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரியான லட்சுமி விடுமுறையில் உள்ளார். இதையடுத்து அவர் வகித்து வந்த மாநகர தெற்கு மண்டல இணை கமிஷனர் பொறுப்பை கூடுதலாக மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர்  பாலகிருஷ்ணன் கவனித்து வருகிறார்.

Related Stories: