கொரோனாவுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடக்கும்: ரத்து செய்ய மாட்டோம்...பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதி

சென்னை: பிளஸ்2 தேர்வு நிச்சயம் நடக்கும். அதை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிளஸ்2 தேர்வை மீண்டும் நடத்துவதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தி வந்தார்.  இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் 2ம் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

 அந்த கூட்டத்தில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, பள்ளிக் கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர்,  பேராசிரியர்கள், கல்வியாளர்கள்,  பெற்றோர் மற்றும் மாணவ- மாணவியர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு  பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும்  என்ற கருத்தையே முன்வைத்தனர். அதனால் எந்த காரணம் கொண்டும் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது. இருப்பினும், கொரோனா தொற்று பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை சுகாதாரத்துறை அறிவிப்பதை பொருத்துதான் தேர்வு  நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.

வீட்டில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், சட்டப் பேரவை தேர்தல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. அது இனி தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யப்படும். பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுவதற்கு  முன்னதாக 15 நாள் அல்லது 30 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு உரிய அவகாசம் வழங்கப்படும். அதனால் பெற்றோரும், மாணவ மாணவியரும் அச்சப்பட வேண்டியதில்லை. கொரோனா தொற்று முற்றிலுமாக நின்றுவிட்டது என்று  சுகாதாரத்துறை அறிவித்த பிறகு தேர்வு நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: