முதன்மை ஷட்டரை அடைக்க முடியாததால் சோத்துப்பாறை அணையிலிருந்து 18 அடி நீர் வீணாக வெளியேறியது-15 மணி நேரத்துக்கு பின் சீரமைப்பு

பெரியகுளம் : சோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுதால் அடைக்க முடியாத நிலையில், 18 அடி நீர் வீணாக வெளியேறியது. 15 மணி நேரத்துக்கு பின் ஷட்டர் பழுது சீரமைக்கப்பட்டது.தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் 126.28 அடி உயர சோத்துப்பாறை அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன், முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கும் வரும் நீரை, வராக நதியில் வெளியேற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை பொதுப்பணித்துறையினர், அணையில் தண்ணீர் திறக்கும் முதன்மை ஷட்டரை இயக்கினர். அப்போது ஷட்டர் பழுதாகி பாதியில் நின்றது. இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வினாடிக்கு 400 கன அடி வீதம் வீணாக வெளியேறத் துவங்கியது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர், அவசர கால ஷட்டரை இயக்கி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்த முயன்றனர்.

அப்போது இரவாகி மழை பெய்ததால் பணிகள் தடைப்பட்டன. மேலும், அணைப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால், அவசர கால ஷட்டரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கனரக ஜெனரேட்டர்கள் மூலம் நேற்று அதிகாலை 2 மணியளவில், அவசர கால ஷட்டரை இயக்கி, தண்ணீர் வெளியேறுவதை பாதியளவு நிறுத்தினர்.

தொடர்ந்து முதன்மை ஷட்டரை சீரமைத்து, நேற்று பகல் 12.30 மணி அளவில் தண்ணீர் வெளியேறுவதை முழுவதுமாக நிறுத்தினர். முதன்மை ஷட்டர் பழுதாகி நின்ற 15 மணி நேரத்தில் அணையில் இருந்து 18 அடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் பெரியகுளம் நகர் மற்றும் 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories: