அதிமுக தோல்விக்கு யார் காரணம்? எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமிக்கு தொண்டர் கடிதம்: சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு

சென்னை: அதிமுக தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்து தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த கடிதத்தில்  கூறியிருப்பதாவது: அண்ணன் எடப்பாடியாரின் சாதனைகள்... 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வைத்தார். 9 மாவட்டங்களில் ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்காமல் பார்த்துக்கொண்டார். 14  மாவட்டங்களில் தலா ஒரு எம்எல்ஏ மட்டுமே வெற்றி பெறும்படி பார்த்துக்கொண்டார். டெல்டா மற்றும் தென் மண்டலத்தை சேர்ந்த 82 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். மொத்தமாக அதிமுக கூட்டணி  வென்ற 75 தொகுதிகளில் 40 தொகுதிகளை கொங்கு மண்டலத்தில் மட்டும் வெற்றி பெற்று அதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றினார். பாண்டிச்சேரி வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிமுக எம்எல்ஏ கூட வெற்றி பெறாமல் பார்த்துக்  கொண்டார். 2016ல் தனித்து போட்டியிட்டு திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று ஜெயலலிதா விட்டு சென்ற 136 எம் எல் ஏக்களை காலி செய்து 2021 தேர்தலில் 65 ஆக மாற்றி சாதித்தார்.

இத்தனைக்கும் பெரிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தும் இந்த நிலை. 2014 ல் ஜெயலலிதா உருவாக்கிய 38 எம்பிக்களை காலி செய்து முட்டை போட்டார். ஆளுங்கட்சியாக இருந்தபோதும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் படுதோல்வி  அடைந்து சாதித்தார். இன்னும் நூறாண்டுகளுக்கு அதிமுகவை வழிநடத்த எடப்பாடியாரே தகுதியான நபர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கு எளிய தொண்டன் எழுதியுள்ள  கடிதம்: நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராகி ஆறு மாத காலம் தான் ஆகிறது. உங்களுக்கு ஏற்கனவே தெரியும் தானே. நாம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று. இதனால், அந்த மாநிலங்களவை பதவியை கட்சி விசுவாசிக்கு  பெற்று தந்து இருக்கலாம். இப்போது ராஜினாமா செய்வதால் அந்த பதவி திமுகவிற்கு சென்று விடுகிறது. நீங்கள் யாருக்கு ஏஜண்ட்?. தானும் படுக்காமல் தள்ளியும் படுக்கமால் இப்படி கட்சியின் எளிய தொண்டனின் குரல் வளையை  நறுக்குகிரீர்களே நியாயமா?

உங்கள் பதவி ஆசைக்கு ஒரு அளவே இல்லையா? இந்த துரோகத்தால் தான் அம்மா உங்களை விரட்டி அடித்தார். நீங்கள் இப்போது அனுபவித்து கொண்டிருக்கும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ் வழங்கியது.  ஜெயலலிதாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நீங்கள் விசுவாசமாக இருந்ததில்லை. நிச்சயம் உங்களுக்கு காலம் பதில் சொல்லும். இனி அதிமுக தொண்டன் ஒருவன் கூட உங்களை மதிக்க மாட்டான்.இவ்வாறு அந்த கடிதத்தில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: