கொரோனா பாதிப்பு முடிவடையும் வரை சாலை வரி, காலாண்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்: மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை

சென்னை: அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின், தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அரசு இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது முழு பொது முடக்கம் அறிவித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன தொழில்களும் முடங்கி இருக்கின்றன. அனைத்து தொழிற்சாலைகளும், தொழிலாளர்கள் பிரச்னை, பொருட்கள் விற்பனை இன்மை, உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தங்களது உற்பத்திகளை 80 சதவீதம் குறைத்து விட்டன. மேலும் பல நிறுவனங்கள் முற்றிலும் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலைகளையே மூடிவிட்டன.

இந்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்கள் செய்து வந்த முறைகேடுகளாலும், ஊழல்களாலும், வாகன உரிமையாளர்கள் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி கடன் சுமையில் இருக்கிறோம். தற்பொழுதும் ஏற்பட்டிருக்கிற இந்த பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கவே முடியாத துயரத்தில் இருந்து வருகிறோம். எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முடிவடைந்து சுமூக நிலை ஏற்பட்டு 100 சதவீதம் முழுமையாக அனைத்து வாகனங்களும் இயங்க துவங்கும் வரை அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி, காலாண்டு வரியை 1.4.2021 முதல் கொரோனா பாதிப்பு முடியும் வரை தள்ளுபடி செய்து உதவி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: