அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு பொதுமக்களின் அழைப்புகளுக்கு உடனே பதில் அளிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு

சென்னை: எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரக் கட்டுபாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் செயல்படுகின்றது. இந்தநிலையில், இந்த மையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோரிடம் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக 2019-2020 முதல் 2021-2022 முடிய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10,054.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து ரூ.227.48 கோடி ரூபாயும், பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.41.43 கோடி கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரிடர் காலங்களில் வரப்பெறும் தகவல்களை உடனுக்குடன் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் திறம்பட பணியாற்ற வேண்டும். கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விபரங்கள் கோரி தகவல் மையத்திற்கு வரப்பெறும் அழைப்புகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட வேண்டும். பல்வேறு துறைகளுக்கு ஒதுகீடு செய்யப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி துரிதமாக கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories: