தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3-வது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது.

பிறகு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் கிடைக்க காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 15 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையாவிடில் 700 முதல் 800 டன் ஆக்சிஜன் தேவைப்படும். தமிழகத்திற்கு 475 ஆக்சிஜன் தேவை என்ற நிலையில் 419 டன் ஆக்சிஜன் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும். மோசமான நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர். மேலும், தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைகு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: