2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி பெறும் வகையில் இன்று முதல் வீடு வீடாக டோக்கன்: 15ம் தேதி முதல் நிவாரண தொகை வழங்கல் : நாள், நேரம் குறிப்பிட்டு இருக்கும்

சென்னை: கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் பெறும் வகையில், இன்று முதல் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது என்று உணவுத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.  கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் கொரோனா நிவாரண நிதி 4,000 வழங்கும் உத்தரவில்  முதல் கையெழுத்திட்டார்.  இதையடுத்து முதல் தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம், அடுத்த மாதம் 2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதி வழங்கும் வகையில் இன்று முதல் 2.7 கோடி பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.  இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான்  வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் 4153.39 கோடி செலவில் மே மாதத்தில் அனைத்து அரிசி  குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நிவாரண உதவி ரொக்கத் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் இம்மாதமே அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட கலெக்டர்களை சாரும். சென்னையை பொறுத் தமட்டில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஆணையரின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு, தெற்கு ஆணையர் செயல்படுத்த வேண்டிய பொறுப்பான அலுவலர்கள் ஆவார்கள்.

* மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை, உணவுத்துறை, கூட்டுறவு சங்கங்களின் இணை,துணை பதிவாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக அனைத்து நியாய விலை கடைகளுக்கும் உரிய காலக்கெடுவிற்குள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

* கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ₹2 ஆயிரம் ரொக்கம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலை கடைகளுக்கும் ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வீதம் உரிய படிவத்தில் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 10.5.2021 முதல் 12.5.2021 ஆகிய 3 நாட்களில் வீடு தோறும் சென்று நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். இத்தொகை மே 15ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும்.

* அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ₹2 ஆயிரம் ரொக்கப் பணத்தை நான்கு ₹500 தாள்களாக அல்லது ₹2 ஆயிரம் தாள்களாகவோ வெளிப்படையாக வழங்க வேண்டும்.

* கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் நியாய விலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். கொரோனா வைரஸ் உதவித் தொகை முதல் தவணையினை பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் 1 மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை முதல் தவணையினை பெறுவதற்காக வருகின்ற மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசையில் நின்று எவ்வித சிரமும் இல்லாமல் உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக நியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, நியாய விலைக் கடைகளுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட அளவில் உள்ள கடைகளில் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர்/ துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் ஒரு அலுவலரை நியமித்து நிவாரண தொகை சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலைக்கடைகள் தவிர ஏனைய நிறுவனங்கள் நடத்தும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும்  கூட்டுறவு சங்க பதிவாளரிடம் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாளில்... குறிப்பிட்ட நேரத்தில்...

நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் நிவாரண முதல் தவணைத் தொகை எந்த புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட வேண்டும்.

Related Stories: