சாலை வரி செலுத்த ஜூன் 30 வரை காலஅவகாசம்: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: காலாண்டு சாலை வரி செலுத்துவதற்கு ஜூன் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்குமாறு தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போக்குவரத்துத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்கள் 160. 2000க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் கோவா முழுவதும் பயணிகளுக்கு சேவை வழங்குகிறோம். ஒரு பேருந்து ஐந்து நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மேலும் குறைந்தது 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் பேருந்தில் பணிபுரியும் ஒவ்வொரு நபரையும் சார்ந்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து இருக்கும் 5 லட்சம் நபர்களைப் பாதுகாக்கிறது.

இதேபோல் பணியாளர்கள் போக்குவரத்து, பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், மேக்ஸி கேப்ஸ், சுற்றுலா டாக்ஸிகள் மற்றும் ஸ்டேஜ் கேரியர்கள் என 50 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. இதை நம்பி ஒரு கோடி இருபத்தைந்து லட்சம் ஊழியர்கள் மற்றும் குடும்பங்கள் உள்ளன.  கொரோனா இரண்டாம் கட்டமாக ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு எங்கள் சேவைகளை வழங்க முடியவில்லை. இதன் விளைவாக, நாங்கள் நிதி பற்றாக்குறையில் இருக்கிறோம். மேலும் சாலை வரிகளை எங்களால் செலுத்த முடியவில்லை. ஆகவே, ஜூன் 30ம் தேதி வரை காலாண்டு சாலை வரி செலுத்துவதற்கு நீட்டிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: