தமிழகத்தில் 2வாரம் ஊரடங்கு எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்: பெட்டி, சாக்கு பைகளில் அள்ளி சென்றனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் நாளை முதல் வரும் 24ம் தேதி வரையில் இரண்டு வாரம் தொடர் முழு ஊரடங்கை தமிழக அரசு  நேற்று அறிவித்தது. முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, நேற்று டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக மதுவகைகளை வாங்கி இருப்பு வைக்க டாஸ்மாக் கடைகளில் நேற்று ஏராளமான குடிமகன்கள்  குவிந்தனர். அட்டை பெட்டிகள், சாக்குப்பை, பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை கொண்டுவந்து மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குடிமகன்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி வரவழைக்கப்பட்டனர். முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்திய பிறகே மது வழங்கப்பட்டது. கூட்ட நெரிசல்  ஏற்படாமல் இருக்க கடைகளின் முன்பாக இரண்டு ஊழியர்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 ஒலி பெருக்கிகள் மூலம் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தினர். இதேபோல், டாஸ்மாக்  விற்பனையாளர்கள் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிந்தும், ஒவ்வொரு முறையும் சானிடைசர் பயன்படுத்தியே மது வழங்கினர்.

மேலும், டாஸ்மாக் கடைகள் இன்றும் மாலை 6 மணி வரை செயல்படும் என்பதால் போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: