ஆக்சிஜன் தேவைப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு 10 சிலிண்டர்களை அனுப்பியதால் 20 உயிர்கள் காப்பாற்றப்பட்டன: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று  வந்தார். பதவி ஏற்ற பின் முதல் முறையாக ஸ்டான்லி மருத்துவமனை வந்த மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவமனை முதல்வர் பாலாஜி மற்றும் சுகாதாரத்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு டிஎம்எஸ் வளாகத்தில்  உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தனியார் மருத்துவமனைகளில் இருந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை செயலாளரிடம்  எடுத்து கூறினேன். அவர் உடனே வார்ரூம்க்கு தகவல் கொடுத்து உடனடியாக 10 சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு 20 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. அதைப்போன்று அரை மணி நேரத்தில் அசோக் நகரில் உள்ள மற்றொரு  மருத்துவமனையில் இதுபோன்று தட்டுப்பாடு இருப்பதாக கூறினர். அவர்களுக்கும் 15 சிலிண்டர்கள் அனுப்பி அங்கேயும் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் ஆலோசனையில் பேரில் ஏற்படுத்தப்பட்ட இந்த வார்ரூம் எந்த அளவுக்கு பயன்  உள்ளது என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்நிலையில் அந்த மையத்தை  நேற்று ஆய்வு செய்தோம். அதைப்போன்று 104 என்ற அழைப்பில் தனியார் மருத்துவமனைக்கு ஏற்படுகின்ற ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கண்டறிந்து உதவி செய்வது என்பது ஒருவாரத்திற்குள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போன்று 108 என்ற திட்டம் திமுக  தலைவர் கலைஞரால் தொடங்கப்பட்ட திட்டம் மிகவும் சிறப்பான திட்டம் ஆகும். அந்த திட்டத்தில்  1,300 வாகனங்கள் தமிழகம் முழுவதும்  இயக்கப்பட்டு வருகிறது.

 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும்  என்பதற்காக  இந்த துறையின் சார்பில் 15 லட்சம் டோஸ்க்கு ₹46 கோடியே 42லட்சம் வரை பணம் செலுத்தப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கு நாட்களிலும் தடுப்பூசி போடப்படும். மேலும் இந்திய மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் லேசான அறிகுறிகள்  உள்ளவர்களுக்காக கோவிட் கவனிப்பு மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படுகிறது. மேலும் சென்னையில்   உள்ள 202  தனியார் மருத்துவமனைகளும், மற்ற மாவட்டங்களில் 600 மருத்துவமனைகள் என 800க்கும் மேற்ப்பட்ட மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் இடப்பற்றாக்குறை போக்கும் வகையில் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலான படுக்கைகள் அமைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். எனவே வரும் 15ம் தேதிக்குள் 12,500  ஆக்சிஜன் வசதிகளுடைய படுக்கைகள் கூடுதலாக தயாராக உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கூடுதலாக மேலும் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் வேண்டும் என்று கேட்டனர். அதற்கும் முதல்வர் அனுமதியளித்துள்ளார். சித்தா,  ஆயுர்வேதா, இயற்கை மருத்துவத்திற்கு முக்கியம் கொடுக்கும் வகையில் இன்று வியாசர்பாடியில் ஆரம்பிக்கப்படுகிறது. என்றார்.

Related Stories: