சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது என்று சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

75 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும் 33 எம்எல்ஏக்கள் அமைச்சராகவும் நேற்று பதிவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இச்சூழலில் சட்டப்பேரவை எப்போது கூடும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி மே 11ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.

அப்போது தற்காலிக சபாநாயகர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். தற்காலிக சபாநாயகராக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பின் மே 12ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக பிச்சாண்டி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நடுவே சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று இன்னமும் முடிவாகவில்லை. ஓபிஎஸ், எடப்பாடி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் யார் எதிர்க்கட்சித் தலைவராகப் போகிறார்கள் என்பதில் குழப்பமே நீடிக்கிறது.

Related Stories:

>