பதவியேற்பு விழாவுக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த மரியாதை

சென்னை: பதவியேற்பு விழாவுக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை அளித்து கவுரவித்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி, ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களுக்கு பதவியேற்பு விழா அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அழைப்பிதழை ஏற்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஓ.பன்னீர்செல்வம் விழா அரங்கத்திற்குள் வந்தபோது, அனைத்து இருக்கைகளிலும் முக்கிய தலைவர்கள் உட்கார்ந்து இருந்தனர். இதனால் ஓபிஎஸ் மற்றும் தனபால் ஆகியோர் பின் வரிசைக்கு சென்று அமர வேண்டிய நிலை இருந்தது.

இதை பார்த்த திமுக முன்னணி தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் முன்வரிசையில் அமர நாற்காலி போட ஏற்பாடு செய்தனர். அதன்படி, முதல் இரண்டு வரிசையில் அமைச்சர்களாக பதவியேற்க இருந்த 33 பேர் அமர்ந்து இருந்த

னர். அவர்களது இருக்கை அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை போட ஏற்பாடு செய்யப்பட்டது. அவரும், அந்த இருக்கையில் அமர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பதவியேற்பு விழா முடிந்ததும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், விவிஐபிக்களுக்கு விழா மேடை அருகே இருந்த தர்பார் மண்டபத்தில் தேநீர் விருது அளித்து கவுரவித்தார். அந்த மண்டபத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

இதையடுத்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகிய 6 பேரும் ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.  இந்த காட்சி, அங்கிருந்த திமுக அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.2016ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றதும் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திமுகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் மற்றும் சில எம்எல்ஏக்கள் பங்கேற்க விழா அரங்கத்திற்கு சென்றிருந்தனர்.

ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு விழா அரங்கத்தின் பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.அதேநேரம், திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக நேற்று பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டதும், அவருடன் அமர்ந்து தேநீர் விருந்தில் பங்கேற்றது, தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினின் வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் அளித்த ராஜமரியாதையை பாராட்டி, அனைத்து சமூக ஊடகங்களில் படம் மற்றும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: