நாமக்கல் அருகே பேய் ஓட்டுவதாக கூறி பெண்களை மிதித்து, சாட்டையால் அடித்த பவுடர் சாமியார் கைது: வாட்ஸ்அப்பில் வைரலானதால் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அடுத்த காதப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாமியார் அனில்குமார் (42). இவர் மஞ்சநாயக்கனூர் கருப்பண்ண சுவாமி கோயிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை

களில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டி வந்தார். சாட்டையை மாலை போல கழுத்தில்  அணிந்து கொள்வதும், முகம் முழுவதும் பவுடரை பூசிக்கொள்வதும் சாமியார் அனில்குமாரின் ஸ்டைல். சமீபகாலமாக பேய் பிடித்துள்ளதாக கூறி வரும் பெண்கள் மற்றும்  நோய் உள்ள பெண்களை, சாமியார் அனில்குமார் சாட்டையால் அடித்தும், தலைமுடியை பிடித்து இழுப்பதும், அவர்களை குனிய வைத்து காலால் எட்டி உதைப்பதுமாக துன்புறுத்தி வந்தார். பெண்களை ஆவேசமாக தாக்கும் சாமியாரின் கொடூர செயலை, அவருடன் இருப்பவர்கள் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பினர்.

 இந்த வீடியோ, கடந்த இரு தினங்களாக வைரல் ஆகி வருகிறது. 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஒரு பெண்ணை, சாமியார் அனில்குமார் மிருகத்தனமாக தாக்குவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து, நேற்று முன்தினம் பொம்மம்பட்டி விஏஓ சஞ்சய்குமார் புகாரின்படி வேலகவுண்டம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் மாலை சாமியார் அனில்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ, 3 மாதத்துக்கு முன் எடுக்கப்பட்டது என்றும், தற்போது யாரோ அதை பரப்பி வருவதாகவும் சாமியார் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சாமியார் பெண்களை தாக்கும் வீடியோ தொடர்ந்து வைரல் ஆகி வருவதால், சாமியாரை கைது செய்யும்படி, மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வேலகவுண்டம்பட்டி போலீசார், நேற்று காலை சாமியார் அனில்குமாரை கைது செய்து, நாமக்கல் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>