தமிழகத்துக்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு இன்று உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்துக்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்கப்படுவதை நாளைக்குள் (இன்று) உறுதிசெய்யும்படி மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டு மருத்துவமனை மரணங்களுக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது, சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆஜராகி, மே 1, 2ம் தேதிகளில் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழ்நாடு வந்தது. மே 2ம் தேதி நடந்த கூட்டத்துக்கு பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த 475 மெட்ரிக் டன் என்பதை முறையாக ஒதுக்கவில்லை. தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 மெட்ரிக் டன்னிலிருந்து 60 மெட்ரிக் டன் ஆந்திரா, தெலங்கானாவிற்கு அனுப்பப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மையத்தில் உற்பத்தியாகும் 150 டன் சென்னை மற்றும் செங்கல்பட்டிற்கு முக்கிய பங்களிப்பை செய்துவருகிறது.

 தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கும் அங்கிருந்து அனுப்பப்படுகிறது. தினமும் 475 மெட்ரிக் டன் தேவைப்படும் என்று மத்திய அரசே நிர்ணயித்துள்ள நிலையில் அதை அனுப்பாததால், அதை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும். செங்கல்பட்டில் மரணமடைந்த 13 பேரும் கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லை. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய இறப்பு விகிதம் 1.17 சதவீதமாக உள்ளது. மே 4ம் தேதி நிலவரப்படி 38,378 ஆக்சிஜன் இணைந்த படுக்கைகள் உள்ளன. 6 லட்சத்து 14,120 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்றார். அப்போது, ராதாகிருஷ்ணன், ரெமிடெசிவிர் மருந்தை பொறுத்தவரை 2.50 லட்சம் கேட்டதில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 24 ஆயிரம் குப்பிகள் கீழ்ப்பாக்கம் மையத்தில் விற்கப்பட்டுள்ளது.

புதிதாக பதவியேற்கவுள்ள முதல்வர், கோவை மதுரையில் ஓரிரு நாட்களில் பிற நகரங்களில் ரெம்டெசிவர் விற்பனை மையங்களை தொடங்க அறிவுறுத்தி உள்ளார். மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருப்பவர்களுக்கான மருந்து 350 குப்பிகள் வரவழைக்கப்பட்டு 20 விற்பனையாகி உள்ளது. ரெம்டெசிவிர் கள்ளச்சந்தை விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் சவாலை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, ஸ்டெர்லைட் உற்பத்தி நிலை ஒரு வாரத்தில் தெரியும். ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்க மேலும் 7 நிறுவனங்களை இந்த வார இறுதியில் அனுமதிக்க உள்ளோம். ஆக்சிஜன் ஒதுக்கீடு உத்தரவிற்காக காத்திருக்காமல் ஆக்சிஜனை அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள் ஓரிரு நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளதால் முறையாக ஒதுக்கீடு செய்வதை உறுதிபடுத்த வேண்டும். வட மாநிலங்களில் டி.ஆர்.டி.ஓ. ஆக்சிஜன் உற்பத்திக்கு விரைந்து செய்தது போல தென் மாநிலங்களுக்கு செய்ய மத்திய அரசு அதிகாரத்திற்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பாலாஜி ராம் தரப்பில் 50 ஆயிரம் ஆக்சிஜன் மருத்துவமனைகள், ஐஐடி நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க வேண்டும். ரெம்டிசிவிர் மருந்துகளை அஞ்சல் அல்லது என்.ஜி.ஓ., அம்மா கிளினிக்குகள் மூலம் வழங்க வேண்டும். 15 நாட்கள் முழு ஊரடங்கு, ஆக்சிஜன் வசதியுடைய ஆம்புலன்சுகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ரெம்டெவிசிர் மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசிற்கு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதற்கு நாளைக்குள் (இன்று) மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் வாழ்வு பறிபோய்விடக்கூடாது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்குவதில் மத்திய அரசு சமமான பங்கீட்டை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

மதுரை, கோவை போன்ற நகரங்களில் டி.ஆர்.டி.ஓ. மூலம் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். மூன்றாவது அலை உருவாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில் தடுப்பூசி விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பல கடுமையான உத்தரவுகளை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்துவது கொரோனாவின் பரவலை குறைக்கும். வழக்கு மே 12ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.

* மத்திய அரசின் புதிய கொள்கையால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே ஆக்சிஜன்

சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனரும், நோடல் அதிகாரியுமான உமாநாத் ஆஜராகி, கேரளாவில் உள்ள பாலக்காடு அருகில் கஞ்சிக்கோடு உற்பத்தியாகும் 40 மெட்ரிக் டன்னை தென் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் வழங்க வேண்டும். தமிழகம், தெலங்கானாவை விட்டுவிட்டு மத்திய அரசு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. கையிருப்பு சிலிண்டர்கள் நாளை (வெள்ளி) வரை மட்டுமே இருக்கும். அதற்கு அடுத்த நாள் மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம். தடுப்பூசிகளை பொறுத்தவரை 18 - 45 வயதினருக்கான அளவை மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 10.3 லட்சம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முழுத்தொகை மே 5ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>