மேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தா ராஜ்பவனில் எளிமையாக நடந்த விழாவில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் நேற்று அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜவும், தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே ஆரம்பம் முதல் கடும் இருமுனை போட்டி நிலவியது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள், இந்திய மதசார்பற்ற முன்னணி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதில், தேர்தல் நடத்தப்பட்ட 292 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன் எப்போதும் இல்லாத வகையில், 2016 தேர்தலில் 211 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 213 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த பேரவை தேர்தலில் வெறும் 3 எம்எல்ஏ.க்களுடன் வென்ற பாஜ, இம்முறை 77 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்கத்தை மாறி மாறி ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.  தேர்தலுக்கு முன்பு, பதவி ஆசை காட்டி திரிணாமுல் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை பாஜ தன் வசம் இழுத்தது. பிரசாரத்தின் போது மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவர் தீவிர பிரசாரம் செய்தார்.  மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், இறுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜ சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  பல்வேறு இன்னல்களை சமாளித்து, வீறு கொண்ட பெண்புலியாய் மம்தா பானர்ஜி இத்தேர்தலில் தனது கட்சிக்கு அமோக வெற்றி பெற்று தந்ததாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

அறுதி பெரும்பான்மை உள்ளதால் நேற்று முன்தினம் ஆளுநர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க  மம்தா உரிமை கோரினார். இதனை ஏற்று கொண்ட ஆளுநர் பதவி ஏற்கும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.  இதனை தொடர்ந்து, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நேற்று ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடத்தப்பட்ட பதவியேற்பு விழாவில் மம்தா 3வது முறை முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மம்தா வங்க மொழியில் உறுதி மொழி ஏற்றார். பதவியேற்ற பின்னர் முதல்வர் மம்தா பானர்ஜி, அனைத்து அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் அமைதியை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

திரிணாமுல் கட்சியின் முக்கிய தலைவர்கள் பார்தா சட்டர்ஜி, சுப்ரதா முகர்ஜி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தலினால் வெளி மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள், தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.

கொரோனா முடிந்ததும்

மிகப்பெரிய கொண்டாட்டம்

முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி,``மேற்கு வங்க தேர்தலை வெற்றியாக்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்போது முதல் சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பை நான் ஏற்கிறேன். நிலைமையை சமாளிப்பதற்கு ஏற்ற காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று முடிவுக்கு பின் பதவியேற்பு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்” என்று கூறினார்.

ஆளுநர் நம்பிக்கை

ஆளுனர் ஜெக்தீப் தன்கர் கூறுகையில், “மூன்றாவது முறையாக பதவியேற்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள். சமுதாயத்தை பெரிதும் பாதித்துள்ள இந்த வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க முதல்வர் அவசர நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்,’’ என்று தெரிவித்தார்.

9ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு

நேற்று நடந்த விழாவில் மம்தா பானர்ஜி மட்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினமான வரும் 9ம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: