கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் வீடுகளுக்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்

சென்னை: திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர்  பேரவை, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தது.

 தேர்தலின் போது அனைத்து கூட்டணி கட்சிகளும் தீவிர பணியாற்றிதற்கு ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்தார்.  இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அவரவர் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நன்றியும்  தெரிவித்தார்.

 தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை, நந்தனம் (டவர் பிளாக்கில்) உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியினர் அளித்த ஒத்துழைப்புக்கும் அவரிடம் நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது உடல் நலம் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் விசாரித்தார். மதிமுகவினரின் அயராத  உழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

 பின்னர், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை, தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனை, அக்கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான  தி.நகர் பாலன் இல்லத்திலும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழு ஒத்துழைப்புக்கு திமுக சார்பில் அவர்களிடம் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை அசோக் நகரில் உள்ள அலுகலகத்தில், உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நடந்து முடிந்த தேர்தல் குறித்து இருவரும் விவாதித்தனர்.  மேலும் கூட்டணி வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் முழு ஒத்துழைப்புக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்தார். இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார். அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சியினரின் தீவிர தேர்தல் பணிக்கு திமுக சார்பில் வாழ்த்து  தெரிவித்தார்.

Related Stories: