கவர்னருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்திப்பு: தேர்தலில் வென்ற எம்எல்ஏக்கள் பட்டியலை வழங்கினார்

சென்னை: தமிழக கவர்னரை தலைமை தேர்தல் அதிகாரி நேற்று நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கினார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. முடிவில், திமுக கூட்டணியில் 159 பேர் வெற்றி பெற்றனர். இதில் திமுக 125, காங்கிரஸ் 18, மதிமுக  4, விடுதலை சிறுத்தைகள் 4, மார்க்சிஸ்ட் கம்யூ. 2, இந்திய கம்யூ. 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1 ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதிமுக கூட்டணியில் 75 பேர் வெற்றி பெற்றனர். இதில் அதிமுக 65, பாமக 5, பாஜ, 4, புரட்சி பாரதம் 1 ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தயார் செய்து டெல்லியில்  உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைத்து ஒப்புதல் வாங்கினார்.

இதையடுத்து தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யார் யார் எந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்கள், அவர்கள் போட்டியிட்ட கட்சி விவரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து நேரில் அளித்தார்.

Related Stories: