ஆளுநர் மாளிகையில் 7ம் தேதி நடக்கிறது பதவி ஏற்பு விழா: ஏற்பாடுகள் தீவிரம்: எளிய முறையில் நடத்த முடிவு

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விழாவை எளிய முறையில் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னை, அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. இதில்  திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை  கோருகிறார். அப்போது, அமைச்சரவை பட்டியலையும் கவர்னரிடம் வழங்குவார்.

கவர்னரின் அழைப்பை ஏற்று, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (7ம் தேதி) பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.  தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்று கொள்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக, மிக எளிய முறையில் பதவி ஏற்பு விழாவை நடத்த மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதையடுத்து சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 7ம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னதாக, பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக  கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், தமிழக டிஜிபி திரிபாதி, தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, பதவி ஏற்பு  விழாவுக்கான ஏற்பாடுகள், யார் யாருக்கு அழைப்பு அனுப்புவது, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளதால், அங்கு  பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, பதவியேற்பு விழாவுக்கு குறைந்த  அளவு எண்ணிக்கையிலேயே விவிஐபிக்களை அழைப்பது, அமைச்சராக பதவியேற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் அனுமதி வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: