விவசாயிகள் கவலை அடைய வேண்டாம்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி தரப்படாது.. தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி தரப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு டெண்டர் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது விளக்கம் அளித்திருக்கிறது. அதன்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி தரப்படாது. இது ஒரு ஆரம்பக்கட்ட ஆய்வு. நாடு முழுவதும் இதுபோன்று எங்கெங்கெல்லாம் கனிமங்கள் இருக்கின்றது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசின் சுரங்க நிறுவனம் ஆய்வு மேற்கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு பாதுகாப்பு மண்டலமாக டெல்டா மண்டலம் அறிவிக்கப்பட்டது. அதன் சட்டம் அமலில் இருக்கிறது. தற்போது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளை செய்ய முடியும். எனவே இது ஆரம்பக்கட்ட ஆய்வு. ஆய்வின் முடிவில் அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது தெரியவந்தால் மாநில அரசிடம் விண்ணப்பம் செய்வார்கள்.

மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். இது வீராணம் நிலக்கரி திட்டத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய நிலக்கரி சுரங்கத் திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி பரவத்தூர், கொடியாளம், அண்டமி, நெம்மேரி உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் பாலைவனமாக மாறிவிடும். நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர். போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல உள்ளது என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post விவசாயிகள் கவலை அடைய வேண்டாம்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமலில் இருப்பதால் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி தரப்படாது.. தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: