தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கட்சிகளிடம் இருந்து கோரிக்கை வரவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்திலும், வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் அலுவலர்கள் கடினமாக உழைத்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வராத அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதால், பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின்போது எந்த மின்னணு இயந்திரத்திலும் கோளாறு ஏற்படவில்லை. சின்ன சின்ன பிரச்னை தெரிவிக்கப்பட்டது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது. வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததால், துணை ராணுவ வீரர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் எந்த வேட்பாளரும் கோரிக்கை வைக்கவில்லை. மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் இன்று ஸ்டிராங் ரூமுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும். கண்ட்ரோல் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். எந்த புகார் இருந்தாலும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்தான் தெரிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன் கட்சிகள் கொடுக்கும் புகார் மீது, தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளிப்படையாக நடந்து கொண்டார்கள். உடனடியாக புகார் பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டத. வாக்குச்சாவடி மையத்தில் கன்டெய்னர் லாரி வந்தது குறித்து கூட எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. அதுவும் பெண்கள் டாய்லெட் தான் எடுத்துச் செல்லப்பட்டது உறுதியாக தெரிந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றியும் எந்த புகாரும் இல்லை.

வரும் காலத்தில் அனைவரும் மின்னணு வாக்குப்பதிவுதான சரியானது என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: