எடப்பாடி அரசு தோல்வி அடைந்ததையொட்டி அரசு ஆலோசகர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்தார்

சென்னை: தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக கே.சண்முகம் 2019 ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். 2020 ஜூலையில் 60 வயது நிறைவடைந்ததையொட்டி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி அரசு அவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கியது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சண்முகம் தலைமை செயலாளராக நீடித்தார். பின்னர் கடந்த ஜனவரி இறுதியில் ராஜீவ் ரஞ்சன் தமிழகத்தின் தலைமை செயலாளராக பதவியேற்றார். ஆனாலும், சண்முகத்துக்கு ஓய்வு கொடுக்கப்படாமல், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக அரசு தோல்வி அடைந்துள்ளதால், கே.சண்முகம் அரசு ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு கே.சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் ஆலோசகராக 2021 ஜனவரி 31ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு பதவி நியமனம் செய்யப்பட்டிருந்தேன். சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னோடு பணியாற்றியவர்களுக்கும், அவர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: