அழகர்கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம் கள்ளழகருக்கு நாளை திருக்கல்யாணம் 4 தேவியரை மணக்க உள்ளார்

அழகர்கோவில், ஏப். 4: மதுரையை அடுத்த அழகர்கோவிலில் கள்ளழகருக்கு திருக்கல்யாண விழா நாளை (ஏப். 5) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியது.

இதையொட்டி முதல் மற்றும் இரண்டாம் நாளான நேற்று மேளதாளம் முழங்க பக்தர்கள் தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் தேவி மற்றும் பூமாதேவியருடன், சிறப்பு அலங்காரத்தில், கோயில் யானை சுந்தரவல்லி முன்செல்ல, பல்லக்கில் புறப்பாடானார். பின் அங்குள்ள நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவவில் சுவாமி இருப்பிடம் சென்று சேர்ந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண திருவிழா நாளை (ஏப். 5) காலை 9.50 முதல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதில் சுந்தரராஜபெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் பெரியாழ்வார் முன்னிலையில் மணக்கிறார். திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அறுசுவை உணவு வழங்கப்படும். இதையடுத்து திருக்கல்யாண மொய் எழுதப்படும். பின்னர் நாளை இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதையடுத்து ஏப்.6ம் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post அழகர்கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம் கள்ளழகருக்கு நாளை திருக்கல்யாணம் 4 தேவியரை மணக்க உள்ளார் appeared first on Dinakaran.

Related Stories: