அய்யலூர், ஏப். 4: அய்யலூர் அருகே பாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (33). கூலித்தொழிலாளி. இவரது உறவினர் கருஞ்சின்னூரை சேர்ந்த முருகன். இவர் அய்யலூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் ஆதரவாளர் ஆவார். இந்நிலையில் சக்திவேல், வண்டி கருப்பண்ணசாமி கோயிலில் இருந்து பிடி மண்ணை எடுத்து வந்து முருகனிடம் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது முதல் சக்திவேல், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று உயிரிழந்தார். கோயிலில் பிடி மண் எடுத்து வந்தததால் தெய்வ குத்தம் ஆகி சக்திவேல் உயிரிழந்து விட்டார் எனக்கூறி அவரது உறவினர்கள் உடலை எடுத்து சென்று கருஞ்சின்னூரிலுள்ள முருகன் வீட்டு முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்திவேல் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கோயிலில் பிடி மண் எடுத்து வர சொல்லிய முருகன் மற்றும் அதிமுக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை எடுக்க மாட்டோம் எனக்கூறி ேபாலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதன்பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை எடுத்து சென்றனர்.
The post அய்யலூரில் இறந்தவர் உடலை வைத்து போராட்டம் appeared first on Dinakaran.
