சூரத் நீதிமன்றத்திற்கு ராகுல் பயணம் நீதித்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறது: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சொல்கிறார்

புதுடெல்லி: சூரத் நீதிமன்றத்திற்கு ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேரில் செல்வதன் மூலம் நீதித்துறை மீது காங்கிரஸ் தேவையற்ற அழுத்தத்தை பிரயோகிக்க முயற்சிப்பதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தன்மீதான தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதற்காக அவர் நேரில் சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர். இதுபற்றி ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: எனது கருத்து மிகவும் எளிமையானது. நீதித்துறையின் மீது காங்கிரஸ் கட்சி ஏன் இந்த வகையான தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கிறது. நீதித்துறை விவகாரங்களைக் கையாள்வதற்கு தனி வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதுதான் வழியா? அமலாக்கத்துறை, சிபிஐ நடவடிக்கை எடுத்தால் அவர்களது அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்கள். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது, ​​அவர்கள் நீதிமன்ற வளாகங்களை கையகப்படுத்த விரும்புகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்றன.

ஒவ்வொரு இந்தியரும் இதை கண்டிக்க வேண்டும். ராகுலுடன் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் செல்வதை பார்க்கும் போது அவர்கள் ஒரு குடும்பத்தின் சித்தாந்தத்தில் உள்ளனர். அந்த குடும்பம் நாட்டை விட உயர்ந்ததா?. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தண்டிக்கப்பட்டபோது காங்கிரஸ் அமைதியாக இருந்தது. ப.சிதம்பரம், டிகே. சிவக்குமார் ஆகியோருக்கும் எந்தவித ஆதரவும் இல்லை. ஆனால் ராகுல்காந்திக்கு மட்டும் ஏன் இந்த நாடகம்?. மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டியம் அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

  • நீதித்துறையை மிரட்டுகிறார்: காங்கிரஸ் கண்டனம்

    ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி கார்கே கூறுகையில்,’ ராகுலுடன் நீதிமன்றம் செல்வது கட்சித் தலைவர்கள் எடுத்த தனிப்பட்ட முடிவு. ஒரு சிறிய வழக்கில் கூட குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் இது ஒரு முழு கட்சிப்பற்றியது. ராகுல் நாட்டுக்காகப் போராடுகிறார். எனவே சூரத்திற்கு கட்சித் தலைவர்கள் செல்வது பலம் காட்ட அல்ல. மாறாக ராகுலுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில்,’ நீதித்துறை, நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகளை தினமும் மிரட்டும் நபர், தினமும் வரலாற்றை திரித்து பேசுபவர். மோடியின் ஆட்சியில் பாசாங்குத்தனத்திற்கு வரம்பு இல்லை போலும்’ என்று தெரிவித்து உள்ளார்.

The post சூரத் நீதிமன்றத்திற்கு ராகுல் பயணம் நீதித்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறது: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: