தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது வீரியமிக்க கொரோனாவால் இறப்பு விகிதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கிய நிலையில் வீரியமிக்க கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்து கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும்அதிகரித்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமிக்கதாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, தான் பாதிப்பு எண்ணிக்கை 1 மாதத்திலேயே 2 லட்சத்தை கடந்து விட்டது. அதே போன்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் 1 மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 113 பேர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் வீரியமிக்க கொரோனாவில் பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இறப்பவர்கள் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை செல்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: கொரொனா தொ‌ற்று பெரும்பாலும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது. இந்த தொற்று கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகள் இல்லாமல் தென்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கு நோயின் தன்மை தீவிமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த காலக்கட்டத்தில் தான் உடலின் எதிர்ப்பு சக்தி தொற்று கிருமிகளை எதிர்த்து போராடும். இதன் பொருட்டு ஏற்படும் அழற்சி நான்கைந்து நாட்கள் கழித்து படிப்படியாக அதிகரித்து அதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, நுரையீரல், இதயம், சிறுநீரகம், குடல், ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல், வயிற்று கோளாறு, இதயம் மற்றும் சிறுநீரக தொந்தரவு ஏற்படுத்துகிறது.

சில நேரங்களில் நமது உட‌ல் எதிர்ப்பு சக்தியானது கிருமியை தீவிரமாக தாக்க முற்படும் பொழுது நம் உடலுக்கும் சேதாரம் விளைவித்து விடும். நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசம் செயலிழக்கிறது. மேலும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு குருதி அடை‌ப்பும் ஏற்படலாம். இதனால் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் குறைந்து மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஆக்சிஜன் நம் உடலில் குறையும் போது அதன் அளவினை ஆக்சிமீட்டர் சாதனத்தில் 94 சதவீதத்துக்கு கீழ் வந்தால் உடனடியாக நாசி வழியாக ஆக்சிஜன் கொடுக்க வேண்டும். அப்படி செய்தும் ஆக்சிஜன் தொடர்ந்து குறைந்து 80 சதவீதம் சென்றால் செயற்கை சுவாச கருவிகள் மூலம் ஆக்சிஜன் செலுத்தி நோயாளிகளை காப்பாற்ற முயற்சிக்கப்படும். இது, பலனளிக்கா விட்டால் இறப்பு தவிர்க்க முடியாமல் போய் விடும். வீரியமிக்க கொரோனாவில் பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இப்படியாக இறப்பவர்கள் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை செல்கிறது.

அலோபதி மருத்துவத்தில் தற்போது எல்லா விதமான வைரஸ் கிருமிகளை அழிக்கும் மருந்துகள் தான் இருக்கிறது. இவை ஒரளவுக்கு தான் நோயை கட்டுபடுத்தும். இதன் காரணமாக தான் பெரும்பாலும் உடல் பக்கபலம் மற்றும் எதிர்ப்புசக்திக்கு துணை தரும் மருத்துவ சிகிச்சை முறையை கையாண்டு நோயாளிகளை குணப்படுத்துகின்றனர். கொரோனா தொ‌ற்று கிருமி தன்னை மாற்றி வடிவமைத்து/திரிபு கொண்டால் மீண்டும் தாக்கும் சூழல் ஏற்படலாம். எனவே தான் சமூக இடைவெளி, முகக் கவசம், கை சுத்தம் எப்போதும் கடை பிடிக்க வேண்டும். ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதால் அடுத்து வரும் 4 வாரங்களுக்கு மற்றவர்களுக்கு நோய் தொற்று பரப்பி விட முடியும். முதல் 14 நாட்கள் பரப்பு தன்மை அதிகமாக இருக்கும். பிறகு குறைந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

கடந்த ஏப்ரல் 1ம் தேதி 19 பேர் ஆக இருந்த நிலையில், கடந்த 9ம் தேதி 23, 10ம் தேதி 23, 11ம் தேதி 24 , 14ம் தேதி 25, 15ம் தேதி 29, 16ம் தேதி 33, 17ம் தேதி 39, 18ம் தேதி 42, 19ம் தேதி 44, 20ம் தேதி 48, 21ம் தேதி 53, 22ம் தேதி 59, 23ம் தேதி 76, 24ம் தேதி 80, 25ம் தேதி 82, 26ம் தேதி 94, 27ம் தேதி 77, 28ம் தேதி 98, 29ம் தேதி 107, 30ம் தேதி 113 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: