கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிடைசரால் சுத்தம் செய்யப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், அஜய் யாதவ், அனி ஜோசப், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் 6 தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பதிலாக புதிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல 10 பொது பார்வையாளர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால், வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். அப்போது வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். இந்த தேர்தலில் கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா விதிமுறைகள் அமல்படுத்துவதன் காரணமாக முடிவுகள் வெளியாவதற்கு சற்று காலதாமதம் ஆகும்.

தமிழகம் முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 75 மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 5,622 துணை ராணுவ படை வீரர்கள், 5,154 தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள், 25,059 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என மொத்தமாக 35,836 பேர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது இல்லாமல் பொது பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை www.results.gov.in, www.elections.tn.gov.in என்கின்ற இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* 5.64 லட்சம் தபால் வாக்குகள்

தமிழகத்தில் தபால் வாக்குகளை பதிவு செய்ய இன்று காலை 8 மணி மணி வரை அவகாசம் உள்ளது. நேற்று வரை 5 லட்சத்து 64,253 தபால் வாக்குகள் வந்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதில் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்று திறனாளிகள் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் தபால் வாக்குகள் செலுத்தி உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 3 லட்சத்து 30,380 பேர் மட்டுமே தபால் வாக்குகள் செலுத்தி இருந்தனர் என்று சத்யபிரதா சாகு கூறினார்.

Related Stories: