மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதாக கூறி கொரோனா நோயாளிகளை அனுமதிக்காமல் சென்னை மருத்துவமனைகள் அலைக்கழிப்பு

* உயிருக்கு போராடும் நிலையில் ஆம்புலன்ஸில் காக்க வைப்பு

* பாசிட்டிவ் தகவல்களை கூட சொல்லாத அதிகாரிகள்

சென்னை: மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதாக கூறி கொரோனா நோயாளிகளை சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்காமல் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அலைகழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களை கூட பல மணி நேரம் ஆம்புலன்ஸில் காக்க வைத்து, திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் தற்போது 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதில், சென்னை பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உச்சத்தை தொட்டு வருகிறது.

குறிப்பாக, ஏப்ரல் 20ம் தேதி 3711 பேர் என்று இருந்த நிலையில், 30ம் தேதி 5,473 பேர் என பத்து நாளில் மொத்தம் 47953 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு சென்னையில் தான் இருக்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் காலியாக இருந்தாலும், அவற்றை நோயாளிகளுக்கு உடனே ஒதுக்கி தருவதில்லை.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருந்தே முடிந்த அளவுக்கு சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை கட்டாயப்படுத்துகிறது. மேலும், கொரோனா சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் யாரையும் உடனடியாக அனுமதிப்பதில்லையாம். கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்காமல் பல மணி நேரம் வரை காக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்களிடம் படுக்கைகள் இல்லை எனக்கூறி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்புகின்றனர்.

அதே நேரத்தில் பல அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருவதால் முக்கியமான விஐபிக்களை மட்டும் அனுமதிப்பதாக கூறப்படுகிறது. இந்த படுக்கைகளில் கொரோனா அதிக பாதிப்பு உடையவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். மாறாக, மருத்துவமனைகளில் அவர்களை அனுமதிக்காமல் ஆம்புலன்சில் காக்க வைக்கின்றனர். மேலும், சில இடங்களில் பாதிக்கப்பட்டோரை திருப்பி அனுப்புவதால், அவர்கள் எவ்வித சிகிச்சையும் இன்றி இறப்பது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரை உடனடியாக அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே கொரோனவால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

* வீட்டு தனிமையில் இருப்பவர்கள் தவிப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்புவர்களை கூட மருத்துவமனைக்கு வர வேண்டாம். படுக்கைகள் நிரம்பி விட்டது. எனவே, வீட்டிலேயே மருந்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி கட்டாயப்படுத்துகின்றனர். முதல் நாள் மட்டுமே மாநகராட்சி சார்பில் மருந்து கொடுக்கப்படுவதாகவும், அதன்பிறகு யாரும் வருவதில்லையாம்.

* பாசிட்டிவ் தகவல் கூட வருவதில்லை

கொரோனா அறிகுறி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்கின்றனர். அவ்வாறு பரிசோதனை செய்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி வருவது இல்லை. இதனால் டெஸ்ட் எடுத்தவர்கள் தங்கள் வழக்கமான பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், சென்னையில் கொரோனாவுக்கு அதிகாரிகளே கதவை திறந்து விட்டது போல ஆகி விட்டது.

* எத்தனை படுக்கைகள் காலி

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 1618 படுக்கைகள் நிரம்பி விட்டன. அயனாவரம் மருத்துவமனையில் 300 படுக்கைகளும் நிரம்பி விட்டன. ஸ்டான்லி மருத்துவமனையில் 1200 படுக்கைகளில் 18 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 450 படுக்கைகளில் 2 மட்டுமே உள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனைகயில் 575 படுக்கைகளில் 5 படுக்கை மட்டுமே காலியாக உள்ளது. கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் 525 படுக்கைகளில் 59 படுக்கை உள்ளது. அதே போன்று கே.கே.நகர் பெரிபெரல் மருத்துவமனையில் 100 படுக்கைகளில் 33 படுக்கைகள் காலியாக உள்ளது. தண்டையார்பேட்டை பெரிபெரல் மருத்துவமனையில் 85 படுக்கைகளில் 20 படுக்கைகள், தண்டையார்பேட்டை பெரிபெரல் மருத்துவமனை-2ல் 65 படுக்கைகளில் 65 படுக்கைகள், அண்ணா நகரில் உள்ள உள்ள பெரிபெரல் மருத்துவமனையில் 100 படுக்கைகளில் 24 படுக்கைகள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* தேதி வாரியாக இறப்பு

கடந்த ஏப்ரல் 20ம் தேதி 17 பேரும், 21ம் தேதி 18 பேரும், 22ம் தேதி 24 பேரும், 23ம் தேதி 37 பேரும், 24ம் தேதி 25 பேரும், 25ம் தேதி 30 பேரும், 26ம் தேதி 35 பேரும் 27ம் தேதி 27 பேரும், 28ம் தேதி 32 பேரும், 29ம் தேதி 40 பேரும், 30ம் தேதி 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கு தாமதமாக சிகிச்சை அளித்தது தான் பிரதான காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: