திருவள்ளூர் ஜி.ஹெச்.சில் நள்ளிரவில் 2 கொரோனா நோயாளிகள் உள்பட 4 பேர் இறந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 கொரோனா நோயாளிகள் உள்பட 4 பேர் நள்ளிரவில் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று தினம் தினம் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இங்கு போதுமான இடவசதி இல்லாததால் ஒரே படுக்கையில் 2, 3 நோயாளிகள் அமர வைக்கப்பட்டு இடநெருக்கடியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலர், தரையிலும் அமர்ந்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5495 பேர். நேற்று புதிதாக தொற்று பாதித்தவர்கள் 792 பேர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 770 பேர். நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் இறந்துள்ளனர். 5510 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தனர். இது தவிர தேசம்மாள், கிஷோர்ராஜ் ஆகியோர் மூச்சு திணறல் காரணமாக நள்ளிரவில் இறந்தனர். நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: