ஒரு சில நாட்களில் பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: எந்தெந்த மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப அங்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இங்கு ஒரே இடத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து மருந்துகளை வாங்கி செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து கூட்டத்தை குறைப்பதற்காக மற்ற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை. அதனை போட்டுக் கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்காலத்தை குறைக்கலாம். மற்றபடி இந்த மருந்தை போட்டால் தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை. எனவே மருந்து தேவைப்படக்கூடிய நோயாளிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். தேவையான மருந்து இருப்பு உள்ளது. தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இந்த மருந்து சப்ளை செய்யப்படுகிறது.

எந்தெந்த மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப அங்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிற 1ம் தேதி முதல் தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 3.5 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: