8 மாவட்டங்களில் இன்று லேசான மழை: பிற மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்

சென்னை: தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர் ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெப்பம் அதிகரித்து வெப்ப சலனம் உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதையடுத்து இன்று தொடங்கி மே 2ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். இதுதவிர தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலையானது, 3 நாட்களுக்கு இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்ப நிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

Related Stories: