செங்கல்பட்டு அருகே நெல் கொள்முதல் செய்வதில் அரசு அலட்சியம்: 20 கிராம விவசாயிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நெல் கொள்முதல் செய்வதில் அரசு தாமதம் செய்வதால், விவசாயிகள் இரவு-பகலாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் பகுதியில் முதன் முறையாக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலூர், சாஸ்திரம்பாக்கம், செட்டிப்புண்ணியம், வெண்பாக்கம், உள்ளிட்ட 20 கிராமங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது நெல்களை வாகனங்களில் கொண்டு வந்து வெட்ட வெளியில் கொட்டி வைத்துள்ளனர். கடந்த 20 நாட்களாக எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் எந்த நேரத்தில் மழை வருமோ, ஆடு மாடுகள் நெல்களை தின்று விடுமோ என்ற அச்சத்தில் 24 மணி நேரமும் தூக்கம் இல்லாமல் கண்விழித்து காத்திருக்கின்றனர். அரசு மூலம் ஆமை வேகத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களுக்கு அரசு சார்பில் நெல் குடோன் இருந்திருந்தால் அறுவடை செய்த நெல்களை குடோனில் ஒப்படைத்து விட்டு அதற்கான தொகையை வங்கியில் பெற்று கொள்வோம். குடோன் இல்லாததால் வெட்ட வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் நெல்களை காவல் காக்க வேண்டிய அவல நிலை உள்ளது. குறைந்த விலையில் நெல் கொள்முதல் செய்யும் அரசு, எங்களுக்கென்று ஒரு குடோன் அமைத்து உரிய நேரத்தில் நெல்களை கொள்முதல் செய்து அதற்கான தொகையை ஓரிரு நாட்களில் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பு கொண்டு வந்து கொட்டி வைத்த நெல் இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. கேட்டால் கொள்முதல் செய்வதற்கு தேவையான கோணி மூட்டைகள் இருப்பில் இல்லை என்று கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆனால் புரோக்கர்கள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து பணம் கொடுத்து விடுகின்றனர். உண்மையான நாங்கள் பாதிக்கின்றனர்’ என்றனர்.

Related Stories: