ஸ்டெர்லைட் ஆலை திறப்பை கண்டித்து தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம்: வீடுகளில் கருப்புக் கொடி

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பதைக் கண்டித்து தூத்துக்குடியில் இன்று வீடுகளில் பொதுமக்கள் கருப்புக் கொடி ஏற்றி கருப்பு தினம் கடைப்பிடித்தனர். கொரோனாவால் உயிரிழந்து வரும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட்டை திறக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதை பண்டாரம்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வக்கீல் அரிராகவன் ஆகியோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று தூத்துக்குடியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி கருப்பு தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பண்டாரம்பட்டி, மீளவிட்டான், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வீடுகளின் முன்பு, ‘‘தடை செய் ஸ்டெர்லைட் ஆலையை’’ என்று கோலங்கள் வரையப்பட்டுள்ளன. இதுதவிர பல வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வீட்டு முன்பு வைத்துள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் தங்களது ‘‘வாட்ஸ் அப் டிஸ்பிளே பிக்சரில்’’ கருப்பு பொட்டு வைத்து தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி நாளை 30ம் தேதி (வெள்ளி) உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்புகளால் ஸ்டெர்லைட் ஆலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: