தமிழகத்தில் மே 15ல் தினசரி பாதிப்பு 19 ஆயிரமாக இருக்கும் என கணிப்பு: 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்படுமா?

* மவுனம் காக்கும் அதிகாரிகள்

* மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் படுக்கைகள்

* அலட்சியத்தை தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்துமா?

* மே 15ம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கேற்றாற் போல் சுகாதாரத்துறை கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தி யிருக்க வேண்டும்.

சென்னை: தமிழகத்தில் மே 15ல் தினசரி பாதிப்பு 19 ஆயிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றாற் போல் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என்பதால் கடந்தாண்டை போன்று 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  ஆனால், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி நோயாளிகளை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. , கொரனோவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை உட்பட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகள் உடன் கூடிய 12370 கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சென்னையில் மட்டும் 2895 படுக்கைகள் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட படுக்கைகளும் நிரம்பி வருகிறது.  இந்த நிலையில், வரும் மே 15ம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கேற்றாற் போல் சுகாதாரத்துறை கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். கொரோனா முதல் அலையின் போது, கடந்தாண்டு மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டன. தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது, மருத்துவமனைகளில் மட்டும் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருங்காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

 ஆனால், தமிழக சுகாதாரத்துறை சார்பில் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் மாவட்டத்தில் 85 சதவீதத்துக்கு மேல் படுக்கைகள் நிரம்பி விட்டன. மற்ற மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளன் எண்ணிக்கை அதிகரிப்பால் படுக்கைகள் நிரம்ப தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டை போன்று நடப்பாண்டிலும் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 20 ஆயிரம் அரசு கட்டிடங்களில் கொரோனா வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அலட்சியம் காட்டாமல் கூடுதலாக படுக்கைகள் வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: