ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தரமின்றி அமைக்கப்பட்ட தார்ச்சாலை-கிராமமக்கள் சாலைமறியல்

சின்னாளபட்டி :  ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தார்ச்சாலை தரமின்றி அமைத்ததை கண்டித்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ளது டி.பண்ணைப்பட்டி ஊராட்சி. இங்கு தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் போடப்பட்ட ரூ.36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.

பண்ணைப்பட்டி முதல் வேலன்சேர்வைகாரன்பட்டி வரை உள்ள தார்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக கிராமமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்தகாரர் மீத நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநரிடம் கிராமமக்கள் புகார் செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று புதிதாக போடப்பட்ட தார்சாலையை தோண்டி காண்பித்து சாலை மறியலில் ஈடுப்ட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘‘அதிமுகவினருக்கு கமிஷனுக்காக விடப்பட்ட இந்த தார்ச்சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளையும் கையிலேயே எடுத்து விடலாம். அனைத்தும் தரமற்ற சாலைகளாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முகமை திட்ட இயக்குநர் திலகவதியிடம் கேட்ட போது, ‘‘தார் சாலைகள் தரமில்லாமல் அமைப்பது குறித்து புகார் வந்ததால் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (சாலைப்பணிகள்) விஜயசித்ரா என்பவரை ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். அவர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்பு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தரமான தார்சாலைகள் அமைக்கப்படும்’’ என்றார்.

Related Stories: