போரூர் ஏரி பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டும் விவகாரம்: பசுமை தீர்ப்பாய உத்தரவு அமல்படுத்தப்படவில்லை: மாசுகட்டுப்பாடு வாரியத்தில் பொதுமக்கள் புகார்

சென்னை: போரூர் ஏரி பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியும் அதை அமல்படுத்தாததால் அப்பகுதி மக்கள் மீண்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். போரூர் ஏரி அருகே மருத்துவ கழிவுகள், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் ஏரியின் நீராதாரம் முற்றிலும் சீர்கெட்டுள்ளது. இதில் உச்ச கட்டமாக கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அணியும் முழு உடல் கவசம் மற்றும் முகக்கவசங்களும் தற்போது போரூர் ஏரி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள மதுரம் நகரில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. ஏரி பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதை எதிர்த்து இவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை அகற்றினாலும் மீண்டும் அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இந்த பிரச்னையை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்காக விசாரித்தது. விசாரணைக்கு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பை கழிவுகளை நிரந்தரமாக அகற்றவும், அந்த இடத்தில் நுண் உர தயாரிப்பு மையத்தை அமைக்கவும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கடந்த ஆண்டு ஜூலையில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மையம் செயல்பட தொடங்கவில்ைல.போரூர் ஏரி பகுதியில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, மதுரம் நகர் குடியிருப்புவாசிகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகியுள்ளனர். இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இது தொடர்பாக குன்றத்தூர் வருவாய்துறை அதிகாரி கூறுகையில், ‘போரூர் ஏரி பகுதியில் இருந்து 1.2 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. குப்பை கொட்டுவதில் அந்த பகுதி பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை. வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க வந்தாலும் ஏரிப்பகுதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் நோய் தொற்றுதான் உருவாகும்,’ என்றார். போரூர் ஏரியில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: