திருவாரூர் அருகே பொதுமக்கள் புகார் எதிரொலி பால கட்டுமான பணியின் பெயரில் ஆற்றிலிருந்து மணல் கொள்ளை

*ஒப்பந்ததாரரிடம் தாசில்தார் விசாரணை

திருவாரூர் : திருவாரூர் அருகே பாலம் கட்டுமான பணி என்ற பெயரில் ஒப்பந்தகாரர் ஆற்றிலிருந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக தாசில்தார் விசாரணை நடைபெற்றது.திருவாரூர் ஒன்றியம் வில்வனம் படுகை பகுதியிலிருந்து சுந்தரவிளாகம் மற்றும் அலிவலம் பகுதியை இணைக்கும் வகையில் வாழ வாய்க்கால் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.ஒன்றரை கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இதனை அதிமுகவை சேர்ந்த ஒப்பந்தகாரர் ஒருவர் டெண்டர் எடுத்து பணி செய்து வருகிறார். இதுவரையில் 75 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த பாலம் நடைபெறும் இடம் வாய்க்கால் என்ற போதிலும் அது ஆறு போன்று அகலமான வாய்க்கால் என்பதால் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதன் அகலமான கரையினை உடைத்து அதிலிருந்து 15 அடி ஆழத்திற்கு மணல் கொள்ளையில் இந்த ஒப்பந்தகாரர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடினர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்தக்காரர் வரவழைக்கப்பட்டு அவரிடம் தாசில்தார் நக்கீரன் விசாரணை நடத்தினார். அதில் சேதப்படுத்தப்பட்ட ஆற்றின் கரையினை மீண்டும் பழைய முறைப்படி சீரமைத்து தருவதாக ஒப்பந்தகாரர் தாசில்தாரிடம் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இது போன்று ஆற்றுப் பகுதிகளில் பாலங்கள் கட்டுமான பணியின்போது ஒப்பந்தத்தில் கட்டுமானத்திற்கு உரிய மணலுக்கும் சேர்த்து தொகை நிர்ணயிக்கப்படும். இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் இதே போன்று கட்டுமானப் பணிக்கு அதன் அருகிலேயே மணல் மற்றும் சவுடு மணல் எடுக்கப்படும் நிலை இருந்து வருகிறது.

இதுமட்டுமின்றி தங்களது தேவைக்கு போக விற்பனைக்கும் இதுபோன்று ஒப்பந்தக்காரர்கள் மணல் மற்றும் சவுடு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் இதனை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: