நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட துவங்கியது. ஆரம்பத்தில் சிலருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், படிப்படியாக பாதிப்பு பல மடங்கு அதிகரித்தது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. இந்த சூழலில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்திற்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை இம்மாதம் 30ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்தது‌.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை, மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுபாடுகள் கடந்த 20ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை 36 மணி நேர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஞாயிற்றுகிழமையான நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதற்கு நீலகிரி மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

நேற்று முன்தினம் மாலை 8 மணி முதலே வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 தாலுக்காகளிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஊட்டி நகரில் உள்ள அனைத்து ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட், உழவர் சந்தை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், வாடகை கார்கள், லாரிகள் உள்ளிட்ட ஏதுவும் ஓடவில்லை. இதனால் ஊட்டி நகரில் மயான அமைதி நிலவியது.

ஒரிரு இரு சக்கர வாகனங்கள் மட்டும் ெசன்று வந்தன. எப்போதும் பிஸியாக காணப்படும் ஊட்டி எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, மார்க்கெட் சாலை, லோயர் பஜார் சாலை, கலெக்டர் அலுவலக சாலைகள் முற்றிலும் வாகனங்கள் இன்றி காலியாக இருந்தன.  இதேபோல் ஊட்டி புறநகரில் ஊட்டி - கூடலூர் சாலை, ஊட்டி - மஞ்சூர் சாலை, ஊட்டி - கோத்தகிரி சாலை உள்ளிட்டவைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஒரிரு மருந்தகங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் சில கடைகள் தவிர அனைத்து மூடப்பட்டிருந்தது. ஞாயிறு ஊரடங்கை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 27 இடங்களில் தற்காலிக தடுப்புகள் அமைத்து சுமார் 600க்கும் காவல் துறையினர் வழக்கம் போல் ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.  இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்ற வாகனங்களில் நகருக்குள் உலா வந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்து வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மாவட்ட, மாநில எல்லைகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு சரக்கு மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் சென்று வர மட்டும் அனுமதித்தனர். மாவட்ட எஸ்பி., பாண்டியராஜன் ஊட்டி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.

வெறிச்சோடிய கூடலூர் பஜார்:கூடலூர்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு நாள் பொது முடக்கத்தால் நேற்று  கூடலூர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. பெட்ரோல் பங்குகள் மருந்து கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்காக முன்கூட்டியே அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே இயக்க போலீசார் அனுமதித்தனர். இதேபோல் கேரளா கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக செல்லும் சரக்கு லாரிகளுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையில் கேரளாவில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக வந்த சரக்கு லாரிகளை நாடுகாணி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசார் தடுத்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் லாரிகள் அப்பகுதியில் காத்துக் கிடந்தன.

இது குறித்து தகவல் தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரிகள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ததை அடுத்து அங்கிருந்து லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் அனுமதி இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். வியாபார,வர்த்தக நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடின.

பந்தலூர்: நேற்று முழு ஊரடங்கு காரணமாக பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா,உப்பட்டி, கொளப்பள்ளி,அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு, பிதர்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் கிராமபுறங்களில் உள்ள சிறு கடைகள்  மூடப்பட்டிருந்தது.

ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை பஜார்  உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்  மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

Related Stories: