நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம் சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர்.  விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை கடந்த ஆண்டு நடந்த தேசிய தேர்வு முகமை அக்டோபர் 5ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. அப்போது, 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து மற்றொரு ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின்போது 594 மதிப்பெண் என்ற புகைப்பட ஆதாரங்கள் மாணவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த  பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து விசாரிக்க கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசு விசாரித்துவரும் நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவையற்றது.  அதனால் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வு இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி வழக்கு தொடர்ந்த மாணவன் மனோஜ், சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தது.

Related Stories: