மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் யாருமின்றி நடந்தது மீனாட்சி திருக்கல்யாணம்: இன்று மாசி வீதி தேரோட்டமும் ரத்து

மதுரை: சித்திரை திருவிழாவில் நேற்று மீனாட்சி அம்மன் - சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப். 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மணமக்கள் அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை கோயில் பழைய மண்டபத்தில் எழுந்தருளினர். திருப்பரங்குன்றம் முருகன் - தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் வருகை கொரோனா தொற்று காரணமாக  ரத்து செய்யப்பட்டது.

 சுவாமி, அம்மனுக்கு ஐவகை தீபாராதனை காட்டப்பட்டன. பின்னர் மணக்கோலத்தில் அம்மன், சுவாமி ஆடி வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து கன்னி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடைக்கு காலை 8.20 மணிக்கு சுந்தரேஸ்வரர் - மீனாட்சி மற்றும் பிரியாவிடை வந்தனர். ஓதுவார்கள் யாகம் வளர்த்து வேதமந்திரம் ஓதினர்.  சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன் பச்சை பட்டிலும், பிரியாவிடை கிளிப்பச்சை பட்டிலும் ஜொலித்தனர். அம்மன் பிரதிநிதியான காளாஸ் பட்டருக்கும், சுவாமியின் பிரதிநிதியான செந்தில் பட்டருக்கும் காப்பு கட்டப்பட்டது. பூஜைக்கு பிறகு சுவாமி, அம்பாள் மூன்று முறை மாலை மாற்றிக் கொண்டனர். சுந்தரேஸ்வரருக்கு, மீனாட்சியை புனித நீர் கொண்டு தாரை வார்க்கும் வைபவம் நடந்தது.

 பின்பு பட்டர்கள் இருவரும் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து எடுத்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, பரவசத்துடன் மலர்களை தூவ, காலை 8.47 மணிக்கு மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்வுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மன் சன்னதி அருகே நந்தி சிலை, புதுமண்டம் அருகே கூடியிருந்த பெண்கள் ரோட்டோரம் நின்றபடி, தங்கள் மாங்கல்யத்துக்கு புதிதாக மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். அப்பகுதியில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்ச்சி இந்து அறநிலையத்துறை  வெப்சைட்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இருப்பினும், கோயில் பகுதியில் உள்ளூர் பக்தர்கள் திரண்டனர். மீனாட்சி திருமணம் நிறைவடைந்ததும், சுவாமி, அம்மன் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பக்தர்களிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் ஒழுங்குபடுத்தினர். இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: