சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கோவாக்சின் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வரிசையில் மக்கள் காத்திருப்பு?...பல இடங்களில் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் அதிருப்தி

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து தமிழகத்துக்கு கோவிஷீல்ட் மட்டுமே லட்சக்கணக்கான டோஸ் வந்து ெகாண்டிருக்கிறது. ஆனால் கோவாக்சின் பற்றிய எந்த தகவலும் அரசு தரப்பில் இருந்து கடந்த சில நாட்களாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 2வது டோஸ் கோவாக்சின் போடுவதற்குள் பொதுமக்கள் திணறியும், அன்றாட பணிகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அனைத்து மாவட்டங்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் வரை 51,32,583 பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 10 ஆயிரம், 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதையடுத்து நாள் ஒன்று 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்துக்கு இதுவரை கோவிஷீல்டு 55,03,590 டோஸ்களும், கோவாக்சின் 8,82,130 டோஸ்கள் என மொத்தம் 67,85,720 டோஸ்கள் வந்துள்ளது. இந்நிலையில் கோவாக்சின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் குறிப்பிட்ட காலஇடைவெளியில் போட வேண்டும். ஆனால், சென்னையில் உள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் முதல் டோஸ் போட வரும் பொதுமக்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்துகளை போட வேண்டாம் என்று வாய் மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு மட்டுமே போடப்படுகிறது. இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள மக்கள் தாங்கள் ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சின் போட்டுக் கொண்ட இடங்களுக்கு சென்று கேட்ட போது கோவாக்சின் தற்போது ஸ்டாக் இல்லை இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் கோவாக்சின் போடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து காலையிலே ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள முகாமில் மக்கள் குவியத் தொடங்கினர். இதையடுத்து காலையில் 200 பேருக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.

அதன்பிறகு பிற்பகல் 12 மணிக்கு மேல் தான் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் விண்ணப்பம் வழங்காததால் பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் விண்ணப்பத்தை கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் எப்படியாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அதிகாரியை சூழ்ந்து கொண்டு விண்ணப்பபடிவங்களை பெற்றனர். அதன்பிறகு அவர்கள் வரிசைப்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

‘நோ’ ஸ்டாக்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கோடம்பாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமில் கோவாக்சின் மருந்து ஸ்டாக் இல்லை என பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. மேலும் வேறுவழியின்றி கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி வந்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் பதிவு

சென்னைக்கு நேற்று மீண்டும் 4 லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு: தமிழகத்துக்கு நேற்று மீண்டும் 4 லட்சம் தடுப்பூசி சென்னை வந்துள்ளது. அதாவது 2 லட்சம் கோவிஷீல்டு, 2 லட்சம் கோவாக்சின் வந்துள்ளது. இந்த மருந்துகள் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து பற்றாக்குறை உள்ள மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: