தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்!: புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது..!!

சென்னை: புனேவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட  2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள சேமிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் மத்திய கிடங்கில் இருந்து வரவழைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 லட்சம் தடுப்பூசிகள் புனேவில் இருந்து கொண்டுவரப்பட்டன. தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஏப்ரல் மாதம் 1 வாரத்தில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது.

வருகின்ற மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்குமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.  இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு தடுப்பூசி மருந்து கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசியானது 53 லட்சத்து 3 ஆயிரத்து 590 டோஸ்கள் வரவழைக்கப்ட்டுள்ளது.

அதேபோல் கோவாக்சினும் 8 லட்சத்து 82 ஆயிரத்து 130 டோஸ்கள் வரவழைக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் இன்று வந்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியையும் சேர்த்து கோவிஷீல்டின் மொத்த எண்ணிக்கை 55 லட்சத்து 3590 ஆக உள்ளது. நேற்றைய தினம் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை என்பது 5 லட்சத்து 23 ஆயிரத்து 154 ஆக இருக்கிறது. தொடர்ச்சியாக தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வந்தாலும் தட்டுப்பாடு என்பது நிலவி வருகிறது. இனி வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தடுப்பூசி வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. மொத்தமாக வரவழைக்கப்பட்டால் மட்டுமே தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: