நோய் தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு கொரோனா பரவாது

* மாஸ்க் அணிந்து பால் கொடுக்க வேண்டும்

* குழந்தைகள் நல மருத்துவர் சுபாஷ் தகவல்

சென்னை: தாய்க்கு தொற்று இருந்தாலும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை என்று குழந்தைகள் நல மருத்துவர் சுபாஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று முதல் அலை ஏற்பட்ட போது 60 வயதுக்கு மேற்பட்டோர்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா  தொற்றின் இரண்டாவது அலை அனைத்து வயதினரையும் பாதிக்கும். குறிப்பாக ஒன்று முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், உடல் சோர்வு வாந்தி, பேதி, பசியின்மை, தோல் திட்டு போன்ற அறிகுறிகள் ஏற்படும். குழந்தைகளுக்கு தொற்றுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு ரத்த பரிசோதனை மற்றும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் போன்ற பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தையெனில் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவிக்க வேண்டும். வீட்டில் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தைகள் உட்பட மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம். பெரும்பாலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா வேகமாக பரவி வரும் காலத்தில் குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகள், பழ வகைகள் அதிகம் கொடுப்பது நல்லது. அதேபோன்று ஊட்டச்சத்து மிக்க பச்சை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்களை தினமும் கொடுக்க வேண்டும். தினம் ஒரு முட்டை கொடுப்பது நல்லது. ஓட்டல் உணவுகள், பேக்கரி பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக தான் குழந்தையின் அருகில் செல்வது நல்லது. பாலூட்டும் தாய்மார்கள் முகக்கவசம் அணிந்து பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தொற்று பரவ வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தாய்ப்பால் ஊட்டச்சத்து மிக்கது என்பதால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

டின் பவுடர் பால் கூடாது

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்க்க கூடாது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தொற்று பரவ வாய்ப்பே இல்லை.பாலூட்டும் தாய்மார்களுக்கு தொற்று இருக்கிறது என்று நினைத்து கொண்டு டின் பவுடர் கரைத்து கொடுக்கும் பட்சத்தில் தான் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தாய்மார்கள் பாலூட்டும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஏனென்றால் காற்றின் மூலம் தான் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Related Stories:

>