திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி மறுப்பால் பாதிப்பு தென்னங்கீற்று தொழிலாளர்கள் வறுமையில் வாடும் அவலநிலை

க.பரமத்தி : சித்திரை திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதியில்லாததால் தென்னங்கீற்று பயன்பாடு குறைவால் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனை செய்யும் கூலி தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் புன்னம், அஞ்சூர், கோடந்தூர், அத்திப்பாளையம், குப்பம், கரூர் ஒன்றியத்தில் வேட்டமங்கலம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், மூர்த்திபாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை வளர்ப்பு, தென்னங்கீற்று தயாரிப்பு வேலையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெயில் காலங்கள் மற்றும் திருவிழாக்கள் என்றாலே அதிகமாக தென்னங்கீற்றுகள் தேவைப்படுகின்றன. மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கிராமப்புறங்களில் அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறும். இதற்கு பந்தல் போட அதிகளவில் தென்னங்கீற்றுகள் தேவைப்படுகிறது. சின்னதாராபுரம், ஒத்தமாந்துரை, நொய்யல், சேமங்கி போன்ற பகுதிகளில் அதிகமான குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தென்னங்கீற்று முடையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்புறங்களில் தற்போது சாமியானா பந்தல்கள் அமைக்கப்படும் சூழ்நிலை இருந்தாலும், தென்னங்கீற்றுகளை கொண்டு போடப்படும் பந்தலுக்கு என்றும் நல்ல வரவேற்பு அதிகளவில் உள்ளது. க.பரமத்தி மற்றும் கரூர் ஆகிய இரு ஒன்றிய பகுதிகளில் தயார் செய்யப்படும் தென்னங்கீற்றுகள் உள்ளுர், வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து பலரும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது கடும் வெயில் இருந்தும் கிராமப்புறங்களில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அரசு அனுமதி இல்லாததால் வீடுகளில் முன்புறம் பந்தல் போடுவதற்காக கீற்று அதிகளவில் விற்பனையாவது தற்போது சற்று குறைந்து வருகிறது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை உள்ளது.

இது குறித்து தென்னங்கீற்று முடையும் தொழிலாளி ஒருவர் கூறுகையில்,ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கிராமப்புறங்களில் அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறும். இதனால் பலரும் வீடுகளில் முன்புறம் பந்தல் போடுவதற்காக ஆண்டு தோறும் தென்னை கீற்று அதிகளவில் விற்பனையாகும். எங்களுக்கும் இருப்பு வைத்துள்ள கீற்றுகள் கூட விற்பனையாகி விடும்.

தற்போது கடும் வெயில் இருந்தும் கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அரசு அனுமதி இல்லாததால் கீற்று விற்பனை இல்லை. கடந்த ஆண்டும் இதே நிலைதான். தற்போது இந்த தொழிலையே நம்பியுள்ள எங்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது என கவலையோடு தெரிவித்தார்.

Related Stories: