ஈரோட்டில் சிறுவர்களை நரபலி கொடுக்க முயன்ற புகாரில் தாய், தந்தை, சித்தி உள்ளிட்ட 5 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் சிறுவர்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக எழுந்த புகாரில் தாய், தந்தை, சித்தி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி ராமலிங்கம் - ரஞ்சிதா தம்பதிக்கு தீபக், கிஷாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராமலிங்கம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இந்துமதியும், அவரது தோழி தனலட்சுமியும் ராமலிங்கம் குடும்பத்தினுடையே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற அந்த 2 சிறுவர்கள் தங்களை நரபலி கொடுக்க தாயாரும் அவரது தோழியும் திட்டமிட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக பரபரப்பு புகாரை அளித்திருந்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஈரோடு தாலுக்கா போலீசார் தலைமறைவாக இருந்த சிறுவர்களின் தாய், தந்தை, சித்தி, அவரது தோழி மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என 5 போரையும் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் ராமலிங்கத்தின் இரண்டாவது மனைவி இந்துமதியும், அவரது தோழி தனலட்சுமியும் சிவன், சக்தி வேடமிட்டு திருமணம் செய்து கொண்டு பல்வேறு பூஜைகள் செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொலைமிரட்டல் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக எழுந்த புகாரில் தாய், தந்தை, சித்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>