நண்பரை கொலை செய்த வாலிபர் கைது மது போதையில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதால் அடித்து கொன்றேன்: பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (42). இவருக்கு திருமணமாகி எலிசபெத் ராணி என்ற மனைவியும், அஜீத் (7) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 வருடமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜ்குமாருக்கு சொந்தமாக வீடு மற்றும் கடை உள்ளதால், அதில் இருந்து வரும் வாடகை பணத்தை வைத்துக்கொண்டு, வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். தனியாக வசிக்கும் இவர், இரவு நேரங்களில் நண்பர்களை வரவழைத்து தனது வீட்டில் மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமாரின் தங்கை ஜெனிபர், நேற்று முன்தினம் மதியம் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றபோது, அவர் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தபோது, அதிகாலை 4 மணிக்கு ஜட்டியுடன் ஒரு வாலிபர் ராஜ்குமார் வீட்டில் இருந்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த அசாருதீன் (28) என்பதும், ராஜ்குமாரின் நண்பர் என்பதும் தெரிந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரை இரும்பு ராடால் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்கு மூலமாக போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று ராஜ்குமாரும், நானும் ஒன்றாக மது அருந்தினோம். போதையில் அங்கேயே உறங்கிவிட்டேன். அப்போது ராஜ்குமார் என்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது எனது ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக கிடந்தேன். இதனால், ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு ராடால் ராஜ்குமார் தலையில் அடித்து கொன்று விட்டு வெளியே சென்றுவிட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அசாருதீன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>