அம்பத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது: 40 சவரன் பறிமுதல்

ஆவடி: அம்பத்தூர் பகுதிகளில் கடந்த 2 மாதமாக பைக்கில் சுற்றும் இருவர், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ்,  குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியதுரை ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.செயின் பறிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை  தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது பைக்கில் வந்து செயின் பறித்த 2 பேரின் உருவம் தெளிவாக பதிவாகியிருந்தது.

இதை வைத்து ெசங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் தமிழரசன் என்ற டேனியல் (31), திருவள்ளூர் அருகே அரண்வாயல் கிராமத்தை சேர்ந்த பிகாம் பட்டதாரி மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் காவல்நிலையத்துக்கு கொண்டுசென்று விசாரித்தனர்.இதில் இருவரும் அம்பத்தூர், மாங்காடு, திருமுல்லைவாயல் மற்றும் பீர்க்கன்காரணை உள்பட பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், 40 சவரனை பறிமுதல் செய்தனர்.

இன்ஜினியர் தமிழரசன் மீது கொலை, வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மணிகண்டன் மீது பைக் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து 2 பேரையும் அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>