தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை:  தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்ட அனுபவமில்லாத கிரிஜா வைத்தியநாதன் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தானராமன், தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும், நில நிர்வாக துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் சுற்றுச்சூழல் விவகாரங்களை அவர் கவனித்து உள்ளார்.

பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த, அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும், கூவம் நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவில் தலைவராகவும், மருத்துவ கழிவுகள் மேலாண்மையில் அவருக்கு அனுபவம் உள்ளது. இதன் மூலம் அவர் பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவங்களை பெற்றிருப்பதாக வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Stories: